Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2008

சாதியும் வர்க்கமும்: இரு ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக
எஸ்.வி.ராஜதுரை

(ஜீவா-பி.எஸ்.ஆர். நூற்றாண்டு நிறைவையொட்டி இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் 21.09.2007 அன்று திருத்துறைப்பூண்டியில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கத்தில் படிப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரையின் சில பகுதிகள்)

திருத்துறைப்பூண்டியில்தான் தோழர் பெரியார் அவர்களுக்கும் தோழர் ஜீவா அவர்களுக்கும் வரலாற்றுரீதியான பிளவு ஏற்பட்டது. 1936ஆம் ஆண்டின் ஏற்பட்ட அந்தப் பிளவு பற்றிய ஒருதலைச் சார்பான விளக்கங்களே பொதுவுடைமை வட்டாரங்களில் நமக்குத் தரப்பட்டுவந்தன. பெரியார் கூறிய விளக்கங்கள் ஒன்று சொல்லப்படவே இல்லை அல்லது அரைகுறையாகச் சொல்லப்பட்டன. பெரியார் ஜமீன்தாரர்களும் பணக்காரர்களும் இருந்த, பிரிட்டிஷ் ஆதரவுப் போக்கு கொண்டிருந்த நீதிக்கட்சியை ஆதரவு நிலைபாட்டை மேற்கொண்டார், ஆனால் ஜீவா சோசலிசப் பாதையில் சுயமரியாதை இயக்கத்தை நடத்திச் செல்ல விரும்பினார் என்பதுதான் இருவருக்குமிடையே ஏற்பட்ட பிளவுக்குக் காரணம் எனப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களால் சொல்லப்பட்டுவருகிறது.

பெரியார் நீ£திக் கட்சி ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் நீதிக் கட்சியினரின் நடைமுறைகள் அனைத்தையும் அவர் ஏற்றுக் கொண்டவரல்லர். அவரைப் பொருத்தவரை நீதிக் கட்சிக்காரர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கும் வர்க்கத்தன்மையில் வேறுபாடு பெரிதாக ஏதும் இல்லை. ஆனால், சமுதாயக் கொள்கைகளில் நிச்சமாக பார்ப்பனியக் காங்கிரஸை விட எவ்வளவோ முற்போக்கானவர்கள். 1930களின் நிகழ்ந்த ஐந்து நேர்வுகளிலிர்ந்து, காங்கிரஸ் கட்சி இந்த நாட்டிற்குப் பேரபாயமாக விளங்கப் போகிறது என்பதைப் பெரியார் உணர்ந்தார்:

(1) காந்தி-இர்வின் ஒப்பந்தமும் போல்ஷ்விசம் இந்த நாட்டில் பரவக்கூடாது என காந்தி அறிவித்ததும்; (2)பகத்சிங் தூக்கிலிப்பட்டமை; (3) பகத்சிங் தூக்கிலிப்பட்டதற்குப் பின் கராச்சியில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாடு; இந்த மாநாட்டில்தான் புகழ்பெற்ற ‘கராச்சி தீர்மானங்கள்’ நிறைவேற்றப்பட்டன. இந்தியா சுதந்திரம் பெற்றால் காங்கிரஸ் கட்சி என்னென்ன அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளை வழங்கும் என்பன குறித்த தீர்மானங்கள். சுதந்திர இந்தியாவில், காங்கிரஸ் ‘ மத விஷயங்களில் நடுநிலை வகிக்கும்’ என்பது ஒரு தீர்மானம்; 4. தாழ்த்தப்பட்டோரின் தனிவாக்காளர் தொகுதியை ஒழிக்கும் 1932ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தம். இந்த நிகழ்வுகள் எல்லாம் பார்ப்பன-முதலாளிய மேலாண்மையை நிலைநிறுத்துவதற்கான கால்கோள் என்று பெரியார் கருதினார். 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு முழுக்க முழுக்க கராச்சி மாநாட்டிற்கான எதிர்வினைதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்; (5) 1934இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டமை.

இந்த ஐந்து நிகழ்ச்சிகளும் காங்கிரசுக்கும் (பார்ப்பன-பனியாச் சக்திகள்) பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குமிடையில் ஏற்பட்ட, ஏற்படவிருக்கும் ஒப்பந்தங்களுக்கான முன்னோடி என்றும் பெரியார் கருதினார்.

பெரியார், ஜீவா, சிங்காரவேலர் ஆகியோரெல்லாம் ஒன்றாக இருந்த போது 1932இல் உருவாக்கப்பட்ட சமதர்மத் திட்டத்தின் மிக நீர்த்துப்போன வடிவத்தையே நீதிக் கட்சி 1936இல் ஏற்றுக் கொண்டது என்று சுயமரியாதை இயக்கத்திலிருந்து வெளியேறிய ‘சமதர்மிக’ளும், அது ‘கராச்சி தீர்மானங்களில் வெளிறிய நகலே’ என்று சத்யமூர்த்தி அய்யர்களும் கூறிவந்த போது, பெரியார் பதிலளித்தார்:

“நமது திட்டங்களுக்கும் காங்கிரஸ் திட்டங்கள் என்பதற்கும் உள்ள வித்தியாசம் இரண்டு. அவை முக்கியமான வித்தியாசங்களாகும். காங்கிரஸ் திட்டத்தில் பழைய புராணங்களையும் சாதி, மத வித்தியாசங்களையும் காப்பாற்றவும் அவரவர் சாதி ஆசாரங்களை அமுலில் நடத்திக் கொடுப்பதாக உத்திரவாதமும் அளிக்கிறது. இவற்றை ஒப்புக்கொள்ள முடியாது. ஒப்புக் கொள்வதானால், நாம் சூத்திரர்களாகவும் தீண்டாத சாதியாராகவும் இருக்க நாமே சம்மதித்துக்கொள்ள வேண்டியவர்களாவோம். அன்றியும் வருணாசிரம தர்மத்தையும் பறையன் பிராமணன் என்கின்ற உயர்வு தாழ்வையும் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாவோம். இன்றைய காங்கிரசின் கிளர்ச்சி எல்லாம் மேற்படி பிராமணத் தன்மையையும் பஞ்சமத்தன்மையயும் காப்பாற்ற வருகிறதேயொழிய பொதுவாக மனித சமூகத்திற்கு எவ்வித நன்மைக்காகவும் இல்லை என்று நான் 15 வருட காலமாகச் சொல்லிவருவதற்கு கராச்சி தீர்மானத்திலுள்ள இந்தத் தத்துவமேதான் கரணம்.

அன்றியும் நமது திட்டத்தில் உள்ள விஷயங்கள் கராச்சி திட்டத்தில் இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? நமது திட்டத்தில் அரசியல் உத்தியோகங்கள், பிரதிநிதித்துவங்கள் இந்த மாகாணத்தில் உள்ள எல்லா வகுப்பார்களுக்கும் (அதாவது, முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள்,பார்ப்பனர்கள்,பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய வகுப்பாருக்கு) அவர்கள் ஜனத்தொகைப் பெருக்கத்துக்குத் தக்கபடி கிடைக்கும்படியாகச் செய்ய வேண்டும் என்பதாக உள்ள திட்டம் காங்கிரஸ்காரர்களின் கராச்சித் திட்டத்தில் இருக்கிறதா என்று கேட்கிறேன். ஆகவே, காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் உள்ள ஒரே வித்தியாசமெல்லாம் சாதி, மத பேதங்கள் ஒழிக்கப்பட வேண்டியதும் அதுவரையில் வகுப்புகளின் அளவுக்குத் தகுந்தபடிதான் உத்தியோகமும் பிரதிநிதித்துவமும் இருந்து வர வேண்டும் என்பதுமேயாகும்.

சாதி பேதம், சாதிப் பிரிவு ஆகியன ஒழிய வேண்டும் என்று சொல்லுகின்ற நீங்கள், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பது ஆகாதா? சாதியைக் காப்பாற்றுவது ஆகாதா? என்று பார்ப்பன தேசியப் பத்திரிகைகள் என்பனவும் அவர்களது கூலிப் பத்திரிகைகளும் கூலிகளும் எழுதவும் கேட்கவும் செய்கின்றார்கள்...அதை விளக்கிக் காட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

கராச்சித் திட்டமோ காங்கிரசின் கொள்கையோ பேதங்களை அடியோடு ஒழித்துவிடுவது என்கிறதாக இல்லை. பூரண சுயேச்சை பெற்ற இந்தியாவில் பறையனும் பிராமணனும் இருக்க மாட்டார்கள் என்றோ, கொடுப்பன கொள்வினைக்கு அருகதையற்ற சாதிமத பேதங்கள் இருக்காது என்றோ ஒரு வாசகம் இருக்குமானால், நான் மாத்திரம் எதற்காக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் வகுப்புவாதமும் பேச வேண்டும் என்று கேட்க காங்கிரஸ்காரர்களுக்கு உரிமை உண்டு.

பார்ப்பனர்கள் வெகு ஜாக்கிரதையாகத் தங்கள் உயர்வைக் காப்பாற்றிக் கொள்வதற்குக் காங்கிரசிடம் உத்திரவாதம் பெற்றுக் கொண்டு, நம்மிடம் வந்து “ நமது தாழ்வையும் இழிவையும் காப்பாற்றிக் கொள்வதாய் உத்திரவு கொடு” என்று நம்மைக் கேட்டால் நம் அத்தனை பேரும் முட்டாள்களா அல்லது வகுப்பு நலத்தை விற்று வயிறு பிழைக்கும் பார்ப்பனக் கூலிகளா என்று யோசித்துப் பாருங்கள். ஆகையால் நாம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பது சாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எந்தவிதத்திலும் முரணான காரியம் ஆகாது என்பதுடன், அதிலும் காங்கிரசைக் கேட்பது எப்படியும் எந்தவிதத்திலும் தவறாகாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதிபேதங்கள் ஒழிவது சட்டத்தினால் முடிய வேண்டுமே ஒழிய, பொதுஜன சம்மதத்தில் என்றால் ஒருபோதும் முடியாது. ஏனென்றால் சாதி கரணமாகப் பாடுபடாமால் கடவுளையும் மோட்சத்தையும் காட்டி, ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும்படியான சவுகரியம் இருக்கும்போது, பலாத்காரத்துக்கோ அல்லது தண்டனைக்கோ அல்லாமல் எவனாவது சாதி ஒழிய சம்மதிப்பானா என்று கேட்கிறேன். ஆகவே சட்டத்தின் மூலம் சாதிகள் ஒழிகின்றபோது, சட்டத்தின் மூலம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எடுத்துவிடுவது சிரமமான காரியமல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் (வே.ஆனைமுத்து (பதிப்பாசிரியர்), பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், 434-436)

அன்று இட ஒதுக்கீடு முறையைக் கொண்டு வந்தவர்கள் நீதிக் கட்சியினர். அதை எதிர்த்தவர்கள் காங்கிரஸ் பார்ப்பனர்கள். அது மட்டுமல்ல, அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருபவர்கள் இன்னும் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள். இது ஒன்றும் அற்ப சொற்பமான விஷயம் அல்ல. இதைக் குறித்துப் பேசுவதற்கு முன் முன்பு உலகளவிலும் இந்திய அளவிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காண வேண்டும்.

இருபதாண்டுகளுக்கு முன் நாம் பயன்படுத்திய வரைபடம் இப்போது காட்சிப் பொருளாக மட்டுமே வைக்கத் தகுதியுடையதாவிட்டது. உலக முதலாளியம் பல்வேறு நெருக்கடிகளுக்குத் தாக்குப் பிடித்து தனது ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொண்டுள்ளது. உலகில் பல்வேறு வல்லாண்மை மையங்கள் இருந்த நிலை மாறி அமெரிக்கா மட்டுமே இன்று ஒரே ஒரு உலக வல்லரசாக விளங்குகிறது. அதனுடைய பொருளாதார வலிமை கடந்த இருபதாண்டுகளாகக் குறைந்து கொண்டே வந்தாலும், இராணுவ வலிமை முன்னெப்போதைக் காட்டிலும் இப் புவிக் கோளத்தின் இருப்பையே அச்சுறுத்துகிற வகையில் பண்புவகையிலும் அளவு வகையிலும் அதிகரித்து வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளைக்கூடப் பணிய வைத்துள்ளது. எனினும் அமெரிக்கா தனது இராணுவ வலிமையை மட்டுமே சார்ந்திருப்பதில்லை. அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு,உலக வங்கி ஆகியன தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின் மூலம் இதுவரை உலக முதலாளியம் நுழைந்திராத மிகவும் வளர்ச்சி குன்றிய நாடுகளிலும்கூட முதலாளியப் பொருளாதார உற்பத்தி உறவுகளையும் பண்பாடுகளையும் உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா, நவீன அறிவியலையும் தொழிற்நுட்பத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் அதே வேளை, தனது நாட்டு மக்களிடையே அறிவியலுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியும் வருகிறது. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வினிய மரபில் வந்தவர்களின் அறிவியல் கருத்துகளுக்கு எதிராக உலகத்தின் தோற்றம் பற்றிய விவிலியக் கருத்துகளை உயர்த்துப் பிடிக்கிறது. இந்தக் கருத்துகள் அமெரிக்கக் கல்வி நிலையங்களில் புகுத்தப்படுவதை ஜார்ஜ் புஷ் ஊக்குவிக்கிறார்.

இந்தப் பிற்போக்குக் கருத்துகள் அமெரிக்காவில் தற்போது ஊக்குவிக்கப்படும் கிறித்துவ அடிப்படைவாதத்தின் பகுதிகளே. முஸ்லிம் நாடுகளுக்கெதிரான தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவான பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதற்காகவே இந்த கிறித்துவ மத அடிப்படைவாதம் ஊக்குவிக்கப்படுகிறது. கூடவே இஸ்ரேலிய ஜியோனிசத்தை வளர்த்து வருகிறது. அதே வேளை, பிற்போக்குத்தனமான முஸ்லிம் நாடுகளிலுள்ள(‘இஸ்லாமிய’ அரசுகள்) மத அடிப்படைவாதச் சக்திகளுடன் நட்புக் கொள்கிறது. இந்தச் சக்திகள் தனக்குப் பயன்படாது என்ற நிலை ஏற்படுகையில் அவற்றை ஒழித்துக்கட்டுதல், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துதல் என்னும் பெயரால், முஸ்லிம் நாடுகளின் மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்துகின்றது.

தனது ஆக்கிரமிப்புக் கொள்கையை அமெரிக்க மக்களிடன் நியாயப்படுத்திச் சொல்வதற்காக, ஏகாதிபத்திய அறிவாளிகள் புதிய தத்துவங்களை உருவாக்குகிறார்கள். உலக மக்கள் மேற்கத்திய கிறித்துவ நாகரிகம், இஸ்லாமிய நாகரிகம், கன்பூசிய நாகரிகம், ஆப்பிரிக்க நாகரிகம், இந்து நாகரிகம் எனப் பல்வேறு நாகரிகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இவற்றில் கிறித்துவ நாகரிகம் ஜனநாயகத் தன்மை கொண்டது என்றும் இஸ்லாமிய நாகரிகம் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்டது என்றும் கன்பூசிய நாகரிகத்தைக் கடைபிடிக்கும் சீனா போன்ற நாடுகள் நம்பத்தகாதவை என்றும் இந்த அறிவாளிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஆனால், இந்து மதத்தைப் பற்றி தப்பாக ஒரு வார்த்தைகூட இவர்கள் பேசுவதில்லை. அமெரிக்காவில் குடியேறியும் குடியுரிமை பெற்றும் வாழ்கின்ற மேல்சாதி இந்தியர்கள் இந்துத்துவச் சக்திகளின் நிதி ஆதாரங்களாகச் செயல்படுகின்றனர். முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வந்துள்ளவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குகின்ற, அவர்களது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கின்ற அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் மீதான இன வெறுப்பைப் பரப்புகின்ற இந்துத்துவச் சக்திகள் அமெரிக்காவில் சுதந்திரமாக உலவ அனுமதிக்கின்றது. அமெரிக்கக் கல்வி நிலையங்களில் இப்போது ராமாயணமும் மகாபாரதமும் கற்பிக்கப்படுகின்றன.

இந்தியாவிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலகிலுள்ள மிகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் சிலர் இடம் பிடித்துள்ளனர் என்பது நாட்டிற்கு எவ்வளவு பெருமை தரும் விடயம்! அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல், அசித் பிரேம்ஜி என இந்தப் பட்டியலில் இடம் பெற இன்னும் பலர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். முகேஷ் அம்பானி இந்தப் பட்டியலில் 14ஆம் இடத்தில் இருக்கிறார்.

அவரது சொத்துக்களின் மதிப்பு 20.1 பில்லியன் அமெரிக்க டாலர். ஒரு பில்லியன் என்பது ஆயிரம் மில்லியன். ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம். ஒரு டாலருக்கு ரூ 40 என்று வைத்துக் கொண்டால் 80,600 கோடி ரூபாய். முகேஷ் அம்பானி குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர்தான். ஆனாலும் அவர் தனது குடியிருப்புக்காக மும்பையில் 27 தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடமொன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறார். இதற்குச் செலவாகும் தொகை அப்படியொன்றும் அதிகமில்லை! ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்தான்!!அதாவது 4030 கோடி ரூபாய்.

அம்பானி 27 அடுக்குக் கட்டடம் கட்டிக் கொண்டிருக்கும் மும்பையில் 2 கோடிப் பேர் சேரிகளிலோ அல்லது தரமில்லாத குடியிருப்புகளிலோ வாழ்கிறார்கள். சேரிகளில் ஆயிரம் பேருக்கு ஒரு கழிப்பறை. புது வகைக் கழிப்பறை மாடலொன்று ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து வரப் போகிறது. ‘பறக்கும் கழிப்பறை’. அதாவது, மலம் கழிக்கக்கூட இடம் இல்லாத் கென்ய நகரச் சேரிகளில் உள்ள மக்கள் பிளாஸ்டிக் பைகளில் மலம் கழித்து விட்டுத் தூக்கி எறிந்துவிடுகிறார்கள். இதுதான் ‘பறக்கும் கழிப்பறை’. தூக்கியெறியப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கணக்கில்லாமல் கிடக்கின்ற இந்தியாவின் நகரப் பகுதி சேரிகளில். பணக்காரர்களுக்கு அமெரிக்க, அய்ரோப்பிய மாடல் என்றால் ஏழைகளுக்கு எழை ஆப்பிரிக்க மாடல்!

இந்தியாவில் இந்துத்துவச் சக்திகளின் வளர்ச்சிக்கும் தாரளவாதப் பொருளாதாரக் கொள்கைக்கும் இந்திய மண்ணில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடிப்பு, செல்வாக்கு ஆகியவற்றின் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. நரசிம்ம ராவ் என்ற பார்ப்பனப் பிரதம அமைச்சர்தான் புதிய பொருளாதாரக் கொள்கையைத் தொடங்கி வைத்தவர். அவருக்கு அன்று உறுதுணையாக இருந்தவர்கள் ஜார்கண்டைச் சேர்ந்த சுக்ரீவன்களும் விபீஷணர்களும். அவர்கள் மட்டும் இலஞ்சத்திற்கு இரையாகாமல் இருந்திருந்தால், நரசிம்ம ராவ் ஆட்சி கவிழ்ந்திருக்கும்.பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதலை பா.ஜ.க. அரசாங்கம் மிக வேகமாகச் செய்தது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்காகவே தனி அமைச்சகத்தை உருவாக்கியிருந்தது. இந்திய மக்களை அமெரிக்காவுக்கு நிரந்தர அடிமைகளாக்குவதை நோக்கமாகக் கொண்ட 123 ஒப்பந்தத்திற்கும் ஆயத்த நடவடிக்கைகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தாலேயே மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், இந்தியாவில் மாற்றமே இல்லாத ஒரு விஷயம் இருக்கிறதென்றால் அது பல்லாயிரமாண்டுகளாக இந்த நாட்டில் இருந்த வருகிற உள்நாட்டு ஏகாதிபத்தியமான, சமூக-பண்பாட்டு ஏகாதிபத்தியமான பார்ப்பனியமும் அதனுடைய முதன்மையான முகவர்களான பார்ப்பனர்களும்தான். இதற்கு, முதல் எடுத்துக்காட்டாக இட ஒதுக்கீடுப் பிரச்சனையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்றும்கூட இடதுசாரி வட்டாரங்களில் ஒரு தப்பெண்ணம் பரவலாக இருந்து வருகிறது. அதாவது, இட ஒதுக்கீடு என்பது பொருளாதார முன்னேற்றத்துக்கான வழிமுறை என்கிற கருத்து. இதனால்தான் ‘வசதிபடைத்த பிரிவினர்’, ‘வறிய பிரிவினர்’ என ஆதிக்க சாதிகள் பேசத் தொடங்கும்போது, நமது தோழர்கள் பலரும் அந்தச் சொல்லாடலில் கொஞ்சம் மயங்கிவிடுகின்றனர்.

அரசாங்கப் பணிகளிலோ, கல்வி வாய்ப்பிலோ இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமோ, வேலை வாய்ப்புத் திட்டமோ அல்ல; இருக்கிற வேலைகளுக்கு, இருக்கிற இடங்களுக்கு சமுதாயத்தில் உள்ள எல்லாப் பிரிவினருக்கும் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் இட ஒதுக்கீடு. வேலை வாய்ப்பினையோ, கல்வி வாய்ப்பினையோ சாதிகளால் பிளவுபட்டுள்ள நமது சமுதாயத்தில் எல்லா சாதியினரையும் சேர்ந்தவர்கள் சரிசமமாக எட்ட முடிவதில்லை என்பதனல்தான் இட ஒதுக்கீடு. இது சொத்துரிமை போன்ற தனிநபர் உரிமையல்ல-உண்மையில் சொத்துரிமையும்கூட இன்றும்கூட சாதியமைப்பால் தீர்மானிக்கப்படுகிறது என்றாலும்கூட. இது கூட்டு உரிமை.

சமுதாயத்தின் எந்தப் பிரிவு அரசாங்கப் பணிகளிலும் கல்வி வாய்ப்பிலும் போதுமான பிரதிநிதித்துவம் பெறவில்லையோ, அந்தப் பிரிவினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கும் இந்த முறையை ஆங்கிலத்தில் affirmative action என்றும் positive discrimination என்றும் கூறுகிறோம். இது தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் சாதகமான, மேல் சாதியினருக்குச் சற்று பாதகமான பாரபட்சம்தான். ஆகவேதான் இது ஆக்கபூர்வமான பாரபட்சம் எனக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கும் இட ஒத்துக்கீடு உண்டு. சோவியத் யூனியனிலும்கூட இந்த ‘affirmativeaction’ இருந்தது. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டிருந்த ஆதிக்க தேசிய இனமாக மகா ரஷ்ய தேசிய இனம் இருந்த அந்த நாட்டில், அரசாங்க நிர்வாக அமைப்புகளில் எல்லா தேசிய இனங்களும் போதுமான பிரதிநிதித்துவம் பெறுவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன.

இந்தியாவைப் பொருத்தவரை அரசாங்கப் பணிகளில் இட ஒதுக்கீடு என்பது இன்றைய மராத்திய மாநிலத்தின் ஒரு பகுதியாகவும் அன்று பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலிருந்ததுமான கோலாப்பூர் சமஸ்தானத்தில்தான், சிவாஜி பரம்பரையில் வந்த சாகு மகராஜ் மன்னரால், 1902இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. பிறகு அதே போன்ற சமஸ்தானமாக இருந்த மைசூரில் 1921இல் கொண்டுவரப்பட்டாலும் பார்ப்பனர்களின் கடுமையான எதிர்ப்பு, நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றின் காரணமாக 1928இல்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமஸ்தானாதிபதிகளாக இல்லாவிட்டாலும் ஜமீன்தாரர்களாகவும் நிலப்பிரபுக்களாகவும் இருந்த நீதிக் கட்சித் தலைவர்களால், 1920, 1921 ஆம் ஆண்டுகளில் அன்றைய சென்னை மாகாணத்தில் இட ஒதுக்கீடு அல்லது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற ஏற்பாட்டுக்கான அரசாங்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அப்போதிருந்த இரட்டை ஆட்சி முறையின் காரணமாக, ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம் இருந்ததாலும் ஆளுநரின் நிர்வாகக் கவுன்சிலிலும் அதிகாரிவர்க்கத்திலும் பார்ப்பனர்களே செல்வாக்குப் படைத்தவர்களாக இருந்ததாலும், அந்த அரசாங்க ஆணைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியவில்லை.

1926இல் ப.சுப்பராயன் அமைச்சரவை ஏற்பட்டபோதுதான் முத்தையா முதலியார் என்னும் அமைச்சர் இதனை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்- 1927ஆம் ஆண்டில். பிறகு தந்தை பெரியாரின் நிர்பந்தங்களின் காரணமாக, பார்ப்பனரல்லாதாரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வந்தது. பெரியாரும் நீதிக்கட்சியினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகவே கல்வி வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வந்தது. அது மட்டுமின்றி, 1934ஆம் ஆண்டு முதல் அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த மைய அரசாங்கத் துறைகளிலும் தனியார் வசம் இருந்த ரயில்வேத் துறைகளிலும் (பின்னர் இது 1944இல் அரசு¨டைமயாக்கப்பட்ட பிறகும், இம்பீரியல் வங்கியிலும் (ரிசர்வ் வங்கியின் முன்னோடி)) தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் 1943இல் வைசிராயின் நிர்வாகக் குழு உறுப்பினராக ஆன பின்னரே, மைய அரசாங்கப் பணிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கத் தொடங்கியது.

ஆனால், சுதந்திரம் அடைந்த ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, சென்னை மாகாணத்தில் இருந்த மய்ய அரசாங்க நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடுக்கு என சட்டப் பிரிவு 16ம், நலிந்த பிரிவினரின் (weaker sections) முன்னேற்றத்துக்காக என சட்டப் பிரிவு 46ம் உருவாக்கப்பட்ட போதிலும் அட்டவணைக்குள் கொண்டுவரப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என தெள்ளத் தெளிவாகக் கூறி உறுதி செய்கிற பிரிவுகள் சேர்க்கப்பட்டன. சட்டப் பிரிவு 16(4), சமுதாயத்தின் எந்தப் பிரிவினருக்கு அரசாங்கப் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று அரசாங்கம் கருதுகிறதோ (not adequately represented in the opinion of the government) அந்தப் பிரிவினருக்கு சிறப்பு உதவி செய்யலாம் எனக் கூறுகிறது. இந்த சட்டப் பிரிவு கூறுகிற ‘பிற்பட்ட வகுப்பினர்’ என்பது தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர் ஆகிய அனைவரையும் குறித்தாலும்கூட தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யும் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. எனினும் அம் மக்களுக்கும்கூட அப்போது கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை.

சென்னை மாகாணத்தில் கல்வி வாய்ப்பில் இருந்த இட ஒதுக்கீடுமுறையை எதிர்த்து 1950இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பார்ப்பனப் பெண்மணி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அவருக்குச் சாதகமான தீர்ப்பைக் கூறினர் (இந்தப் பெண்மணியின் மனுவோடு வேறு இரண்டு பார்ப்பனர்கள் தாக்கல் செய்த மனுக்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.) சென்னை அரசாங்கத்தின் மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றமும் இட ஒதுக்கீடு ,அரசியல் சட்டப் பிரிவு 14க்கு எதிரானது எனத் தீர்ப்புக் கூறியது. வழக்குப் போட்டவரின் யோக்கியதையை இங்கு நாம் குறிப்பிட விரும்பவில்லை. இப்படித்தான் தொடங்கியது இட ஒதுக்கீடு விஷயத்தில் உச்சநீதி மன்றத்தின் பார்ப்பனிய அநீதி. தந்தை பெரியார் சென்னை மாகாணத்தில் இருந்த பல்வேறு அரசியல், சமூகத் தலைவர்களை ஒன்று திரட்டிக் கிளர்ச்சி செய்ததன் காரணமாக, அரசமைப்பு அவையில் (Constituent Assembly) -அன்று மய்யச் சட்டமன்றமே, அதாவது நாடாளுமன்றமே, அரசமைப்பு அவையாகவும் இருந்தது - அரசியல் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அண்ணல் அம்பேத்கரின் வழிகாட்டுதலின் நேரு முன்மொழிந்த அந்தத் திருத்தம் 243 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. எதிர்த்து வாக்களித்தவர்கள் 5 பேர் மட்டுமே. அந்தத் திருத்தம்தான் அரசமைப்புச் சட்டப் பிரிவு 15(4) ஆகும். “சமூகரீதியிலும் கல்விரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு” (socially and educationally backward classes) கல்வியில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இப் பிரிவு கூறுகிறது. இந்தப் பிரிவுதான் தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரையும் சேர்த்து ‘பிற்பட்ட வகுப்பினர்’ என்று கூறியது. ‘பொருளாதாரரீதியில் பிற்படுத்தப்பட்ட’ என்பதைச் சேர்க்குமாறு சில உறுப்பினர்கள் கூறியதை அம்பேத்கர், நேரு உள்ளிட்ட இந்த 243 பேர் ஏற்றுக் கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கும் கல்வியில் இட ஒதுக்கீடு இந்தப் புதிய சட்டப் பிரிவின் வழியாகத்தான் கிடைத்தது.

‘பொருளாதாரரீதியாக பிற்படுத்தப்பட்ட’ என்பதைச் சேர்க்குமாறு வற்புறுத்தியவர்களில் ஒருவர்தான் பாஜவின் முன்னோடியான பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி. இவரும் அப்போது நேரு அமைச்சரவையில் இருந்தார். ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ என்பதற்கான தெளிவான வரையறையை இந்தச் சட்டப் பிரிவு வழங்கியிருந்த போதிலும் மைய அரசாங்கம் பிற்படுத்தப்படோருக்கு வேலை வாய்ப்பை வழங்கவில்லை. அதற்குப் பதிலாக, சட்டப் பிரிவு 340இன் கீழ் ஒரு குழுவை அமைத்தது. சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டுக்கான திட்டங்களை மைய அரசாங்கம் வகுக்க வேண்டும் என்றும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்றும் இச்சட்டப் பிரிவு கூறுகிறது.

காகா காலேல்கர் என்ற மராத்தியப் பார்ப்பனரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு 1955இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அது 2399 சாதிகளைப் பிற்பட்ட சாதிகள் என அடையாளப்படுத்தியது. பெண்கள் எல்லோரையும் பிற்பட்ட வகுப்பினராகக் கருத வேண்டும் எனப் பரிந்துரைத்தது. உயர் (தொழிற்)கல்வியில் 70%விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்குத் தரும்படி கூறியது. மய்ய அரசாங்கப் பணிகளைப் பொறுத்தவரை ஏ,பி.சி.டி பிரிவுகளில் முறையே 40,33.3, 33.3, 25 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்குத் தர வேண்டும் எனக் கூறியது. சாதிவாரியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது 1881இல் தொடங்கி 1931ஆம் ஆண்டோடு நின்று விட்டதால், இனி சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. மைய அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கையுடன் காகா காலேல்கர் இணைத்திருந்த தனிப்பட்ட கடிதத்தில், “சாதிரீதியாக இட ஒதுக்கீடு தருவதில் எனக்கு விருப்பமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்!. எப்படியிருந்தாலும் இந்த அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையையும் நேரு அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

மாறாக, ‘சோசலிஸ்ட்’ நேரு, மைய அமைச்சரவையைக் கூட்டி இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை என்று முடிவு செய்ததுடன் நிற்காமல் 1961இல் மாநில முதலமைச்சர்களுக்கு ஒரு நேர்முகக் கடிதம் (demi official letter) எழுதினார்: “பொருளாதாரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுங்கள். சாதிரீதியாக இட ஒதுக்கீடு என்பது திறமையைப் பலி கொடுத்துவிடும்” என்பதுதான் இதன் சுருக்கம் காகா காலேல்கர் அறிக்கை மீது நேருவைப் போலவே இந்திரா காந்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1977இல் ஆட்சிக்கு வந்த ஜனதாக் கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் காகா காலேல்கர் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறியிருந்தது. எனினும் 1979இல்தான், உள்துறை அமைச்சராக இருந்த சரண் சிங் ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் தலைவர்தான் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (B.P.Mandal). இவர் பீகார் முதலமைச்சராக இருந்தவர்; வழக்கறிஞர்; பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.

மண்டல் குழு இந்தியாவில் அப்போதிருந்த 1406 மாவட்டங்களில் 1405 மாவட்டங்களில் ஆய்வுகள் நடத்தியது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் பெருமழை பெய்து கொண்டிருந்ததன் காரணமாக அங்கு அக் குழுவால் செல்ல இயலவில்லை. 1405 மாவட்டங்களில் ஆய்வு நடத்தியதோடு மட்டுமின்றி டாட்டா புள்ளியியல் மையம், டெல்லி பல்கலைக் கழகம் ஆகியவற்றிலிருந்த சமூகவியல் அறிஞர்களின் கருத்தையும் கேட்டறிந்தது. இவையெல்லாவற்றையும் தொகுத்த பிறகே மண்டல் குழு தனது அறிக்கையைத் தயாரிக்கத் தொடங்கியது.

அரசமைப்புச் சட்டம் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ என்பதை ‘சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட’ என்று மட்டுமே பொருள் கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்த போதிலும், மண்டல் குழு ‘பொருளாதாரரீதியாகவும்’ என்பதையும் சேர்த்துக் கொண்டது. அதாவது ஒரு சாதியின் பிற்பட்ட தன்மையைத் தீர்மானிக்க சமூக, கல்வி, பொருளாதார அளவுகோல்கள் மூன்றையும் பயன்படுத்தியது.

இந்த அளவுகோல்களைக் கொண்டு இந்துக்களில் 44%, இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய சமயங்களைச் சேர்ந்தவர்கள் 8% என 52% மக்களை ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ என வரையறுத்து அவர்களின் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளைச் செய்தது. முதலில் அந்தப் பரிந்துரைகளில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்: 1.கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு; 2.வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு;3.தொழிற்பயிற்சிக்குக் கடன் கொடுப்பதில் 27% ஒதுக்கீடு;4.அரசு உதவி பெறும் தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் இட ஒதுக்கீடு; 5.முற்போக்கான நிலச் சீர்திருத்தத்தின் மூலம் உற்பத்தி உறவுகளைப் புரட்சிகரமாக மாற்றுதல்.6.மீனவர் போன்ற மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அட்டவணை சாதியினருடன் சேர்த்து அவர்களுக்கும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் தனித்தொகுதிகள் தரப்பட வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் 52% எனத் தீர்மானித்த மண்டல் குழு, 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மட்டுமே பரிந்துரை செய்தது. இதற்கான காரணத்தை அறிய நாம் மீண்டும் நீதிமன்ற வழக்குகளைப் பார்க்க வேண்டும். மைசூரைச் சேர்ந்த பாலாஜி என்பார் மைசூர் பகுதியில் 1928 முதல் நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீடு முறையை (அங்கு, இட ஒதுக்கீடு என்பது சில சமயம் 68% வரை சென்றது) எதிர்த்து உச்ச நீதி மன்றத்தை அணுகினார். இந்த வழக்கில் 1963ஆம் ஆண்டு தீர்ப்புக் கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐவர் கொண்ட ஆயம் (bench), இட ஒதுக்கீடு 50% த் தாண்டுவது அரசமைப்புச் சட்டத்தின் உட்பொருளுக்கு (spirit of the constitution) எதிரானது என்று கூறிவிட்டது. இந்தத் தீர்ப்பு சரியானது அல்ல என்று பல்வேறு வழக்குகளில் வீ.ஆர்.கிருஷ்ணய்யர், சின்னப்ப ரெட்டி போன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர் என்றாலும் அவர்கள் ஐந்து நீதிபதிகள் கொண்ட ஆயமாக அமைந்து தீர்ப்புக் கூற முடியவில்லை. எனவே, அரசமைப்புச் சட்டப்படி ஏற்கனவே தாழ்த்தப்பட்டோருக்கு இருந்த 15%, பழங்குடியினருக்கு இருந்த 71/2% ஆகியன போக மீதி 27% (மொத்தமாகப் பார்த்தால் 491/2%, அதாவது 50%) உச்ச நீதிமன்றம் விதித்த உச்ச வரம்பைத் தாண்டாதபடி பார்த்துக் கொண்டது மண்டல் குழு.

இந்திரா காந்தியும் ராஜிவ் காந்தியும் இந்த அறிக்கையை 1990வரை கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்.1990இல் வி.பி.சிங் ஆட்சிக்கு வந்த பிறகுதான் மண்டல் குழு பரிந்துரைகளிற் வேலை வாய்ப்புக்கான பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் அரசாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதிலும்கூட இராணுவப் பணிகளில் இட ஒதுக்கீடு இல்லை; சிவில் பணிகளில் மட்டுமே இட ஒதுக்கீடு. இதிலும்கூட நீதித் துறை, அறிவியல் உயர் ஆய்வுப் பணிகள், அணுச்சக்தி ஆராய்ச்சித் துறை போன்றவற்றில் இல்லை. மேலும், பிற்படுத்தப்பட்டோரில் மைய அரசாங்கப் பட்டியல், மாநில அரசாங்கப் பட்டியல் ஆகிய இரண்டிலும் இருப்போர்க்கு மட்டுமே இட ஒதுக்கீடு உண்டு. மண்டல் குழு அறிக்கையின்படி இட ஒதுக்கீடு பெற வேண்டிய சாதிகள் 3743.ஆனால், மய்ய, மாநிலப் பட்டியல்கள் இரண்டிலும் இருந்த சாதிகளோ 2000 மட்டுமே. பின்னர் 700 சாதிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இன்னும் ஆயிரம் சாதிகள் சேர்க்கப்படவில்லை.

1991இல் ஆட்சிக்கு வந்த பார்ப்பனர் நரசிம்மராவ் ஒரு சூழ்ச்சி செய்தார். வி.பி.சிங் பிறப்பித்த ஆணையில் ஒரு திருத்தம் செய்தார். ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள வறிய பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு’ என்பதுதான் அந்தத் திருத்தம். பின்னர் மற்றொரு ஆணை பிறப்பித்தார்: “எந்தவித இட ஒதுக்கீட்டின் கீழும் வராத வறிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு” என்று அந்த ஆணை கூறியது. ஆனால், நரசிம்மராவின் ஆணை சட்டப்படி செல்லாது, ஏனெனில் அது 50% உச்ச வரம்பை மீறுகிறது என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் என்பதைத் தீர்மானிக்க சாதியை அடிப்படையாகக் கொள்வதில் தவறில்லை என்றும் 1992இல் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் (இந்திரா சாஹ்னி வழக்கு) பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ‘வசதி படைத்த பிரிவினருக்கு’ (creamy layer) இட ஒதுக்கீடு தருவதை எதிர்த்தது. பிறகு அரசாங்கம் சமர்ப்பித்த ஆலோசனகளை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் ரூபாய் வருமானமுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என அறிவித்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததும், ஓய்வு பெறும் அரசாங்க ஊழியர்களின் வயதை 58இலிருந்து 60 ஆக உயர்த்தியது. இது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான சூழ்ச்சிகளில் ஒன்று. அரசுப் பணிகளில் காலியான இடங்களை நிரப்பாமலிருந்தது பாஜக அரசாங்கம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் அட்டவணை சாதியினருக்கும் பழங்குடி மக்களுக்கும் கிடைத்திருக்க வேண்டிய வேலை வாய்ப்புக்ளையும் பறித்தது.

இதற்கிடையே, அட்டவணை சாதியினருக்கும் பழங்குடி மக்களுக்கும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு இருந்தது அரசமைப்புச் சட்டம் 16(4) வின்படி. அது சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. எனவே நாடாளுமன்றம் 16(4)A என்னும் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது. அதை எதிர்த்தும் ஒரு வழக்குப் போடப்பட்டது. இரண்டாண்டுகள் கழித்துத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பதவி உயர்வு, வேலைக்கு எடுத்தல் ஆகிய இரண்டையும் சேர்த்தால் இட ஒதுக்கீடு 50%க்கும் மேல் போகிறது. எனவே இந்தச் சட்டத் திருத்தமும் செல்லாது என்று தீர்ப்புக் கூறியது. எனவே 16(4) B என்ற புதிய சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இதை எதிர்த்தும் ஒரு வழக்குப் போடப்பட்டது.

அதற்கும் ஒரு தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்:அதாவது அரசமைப்புச் சட்டத்தின் 335ஆம் பிரிவின்படி, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்குப் பணி வாய்ப்போ,வேலை வாய்ப்போ வழங்கும்போது, அரசாங்க நிர்வாகத்தில் தகுதி, திறமை (merit and efficiency) குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; ஆகவே பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தந்தால் தகுதி,திறமை போய்விடும். நாடாளுமன்றம் இந்த 335ஆம் பிரிவுக்கு பகுதித் திருத்தம் (partial amendment) ஒன்று கொண்டு வந்தது.

மீண்டும் உச்ச நீதிமன்றம் தலையிட்டது. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பெறுகிறவர்களுக்கு பணி மூப்பு (seniority) தரக்கூடாது என்று கூறியது. எனவே, இவர்களுக்கு தொடர் பணிமூப்பை (consequential seniority) வழங்குவதற்காக நாடாளுமன்றம் இன்னொரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. ஆக, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பெறுவதை ஒன்பது ஆண்டுகள் தடுத்து நிறுத்தியது உச்சநீதிமன்றம்.

பிறகு இன்னொரு வழக்கு வந்தது. கர்நாடகத்தைச் சேர்ந்த பாய் பவுண்டேஷன் (Pai Foundation) என்னும் தனியார் கல்வி நிறுவனம் தொடுத்த வழக்கு. தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தரும்படி கூற மைய அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இதற்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளின் அரசியல் பிரதிநிதிகள் விழிப்படைந்தனர். கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்னும் பிரச்சனை மீண்டும் முன்னணிக்கு வந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் வந்ததும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனம் நாச்சியப்பன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மைய அரசாங்கத்தின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% ஒதுக்கீடு தரும்படி பரிந்துரைத்தது.

அதன்படி மைய அரசாங்கம் Central Educational Institutions (Reservation in Admission) Act-2006 என்னும் சட்டத்தை இயற்றியது. இது IIT,IIM,AIIMS,Central Universities ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்தது. உடனே இதை எதிர்த்து மேல் சாதியினர் உச்ச நீதிமன்றத்துக்குப் போனதுடன், இந்த உயர் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக AIIMSஇல் உள்ள மாணவர்களும் மருத்துவர்களும் போராட்டத்தைத் தொடங்கினர். மைய அரசாங்கம் பயந்துபோய் வீரப்ப மொய்லி தலைமையில் இன்னொரு குழுவை அமைத்தது. அது, இந்த 27% ஒதுக்கீடால் பொதுப் போட்டி (open competition) பாதிக்கப்படாது.

ஏனென்றால் இந்தக் கல்வி நிறுவனங்களிலுள்ள இடங்களில் இன்னும் 54% அதிகரிக்கப்படும். எனவே, இட ஒதுக்கீடால் மேல் சாதியினர் இழக்கும் இடங்கள் இந்த அதிகரிப்பால் திரும்ப அவர்களுக்கே வந்து விடும் எனக் கூறியது. இந்த 27% இட ஒதுக்கீடை ஒரேயடியாக நடைமுறைப்படுத்தாமல் ஆண்டுக்கு 9% என்று (இதிலும் கான்பூர் IITயில் 4% தான்) நடைமுறைப்படுத்தலாம் எனப் பரிந்துரைத்தது. இதை மைய அரசாங்கம் ஏற்றுக் கொண்டு மற்றொரு ஆணையைப் பிறப்பித்தது. ஆனால் மேல் சாதி மாணவர்களும் சரி, உச்ச நீதிமன்றமும் சரி, இதைக்கூட ஏற்றுக் கொள்ளவில்லை.

அர்ஜித் பசாயத், தல்வீர் பண்டாரி ஆகிய இரு பார்ப்பன நீதிபதிகள்தான் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். முன்பு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடுக்காக உச்ச நீதிமன்றம் சொன்ன வருமான உச்ச வரம்பை, அதாவது மாதம் இரண்டை இலட்சம் என்பதை, கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினர். வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பதில் ‘கிரீமிலேயர்’ என்பதில் ஓரளவு நியாயம் இருக்கிறது. ஆனால், மைய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான பயிற்சி பெறுவதற்கே இரண்டரை லட்சம் செலவாகும். அதாவது ‘கிரீமிலேயரால்’ மட்டுமே இவற்றில் சேர முடியும்!

அது மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பட்டியலில் சேர்வதற்கு போட்டி போட்டுக் கொண்டு கியூ வரிசையில் நிற்கும் மனிதர்களை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது என்று இந்த நீதிபதிகள் கூறினர். 2007 ஆம் ஆண்டிலிருந்தே தவணை முறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உயர் கல்வி நிறுவங்களுக்கு அரசாங்கம் அறிவுரை சொல்லிகொண்டிருக்கையில் அதற்கு இடைக்காலத் தடையும் விதித்துவிட்டனர். மைய அரசாங்கம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை அணுகி இந்த வழக்கை அதிக எண்ணிக்கையுள்ள நீதிபதிகள் கொண்ட ஆயத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதின் பேரில் பழைய பார்ப்பன நீதிபதிகள் இரண்டு பேரையும் உள்ளடக்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட ஆயம் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கிறது.

மேல் சாதியினரின் சார்பில் வழக்காடும் வழக்குரைஞர்களின் வாதங்களை நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பாடுபட்டோரின் சொல்லாடல்களை இன்று இவர்கள்தான் பயன்படுத்துகிறார்கள் - சமூக நீதி, சமூக சமத்துவம் என்றெல்லாம்.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, சாதிய சமுதாயத்தில் புதிய ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிவிடும் என்கிறர்கள். தற்சமயம் மேல்சாதி மேட்டுக்குடி மாணவர்களுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பு மாணவர்களால் அச்சுறுத்தல் இல்லை. அவர்களுக்கான இட ஒதுக்கீடு 221/2% என்றாலும், இந்த நிறுவனங்களில் உள்ள அந்த வகுப்பு மாணவர்கள் 2% கூட இல்லை. எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் உள்ளே நுழைந்தால் தங்களுக்குப் போட்டியாக வந்துவிடுவார்கள் என நினைக்கின்றனர்.

இனி, பார்ப்பனியமும் பார்ப்பனரும் மாறவில்லை என்பதற்கு இரண்டாவது எடுத்துக்காட்டாக, ராமர் சேது பாலம் என அழைக்கப்படும் ஆதாம் பால விவகாரத்தில், மைய அரசாங்கத்தின் பண்பாட்டு வளர்ச்சித் துறையும் தொல்லியல் துறையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணத்தின் சில பகுதிகளை முதலிலும் பின்னர் அந்தப் பிரமாணம் முழுவதையும் மைய அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொண்டதன் மூலமும், தமிழகத்தைச் சார்ந்த தொல்லியல் அறிஞர்கள் இருவரை பணி இடை நீக்கம் செய்ததன் மூலமும் பாஜக.வைத் திருப்திப் படுத்தியுள்ளது.

சேதுக் கால்வாய்த் திட்டத்தை சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தினரும் மீனவ சமுதாயத்தினரும் எதிர்க்கின்றனர். சேதுக் கால்வாய்த் திட்டத்தை சுற்றுச்சூழல் காரணங்களைக் கொண்டோ வேறு காரணங்களைக் கொண்டோ விமர்சிப்பது, எதிர்ப்பது என்றால் அதிலுள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முடியும். ஆனால், மத அடிப்படைவாதத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அறிவியலுக்கும்,பகுத்தறிவுக்கும், வரலாற்றுக்கும் எதிரான காரணங்களின் அடிப்படையில் சங் பரிவாரம் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

ஒரு நகராட்சிமன்றத் தலைவர் பதவிக்குக்கூடத் தனது சொந்த பலத்தால் போட்டி போட்டு வெற்றிபெற முடியாத, ஆனால், இந்திய ஊடகங்களால் பெரும் முக்கியத்துவம் தரப்படுகின்ற ஒரு அரசியல்வாதி -சுப்பிரமணியம் சுவாமி - உச்சநீதி மன்றம் செல்கிறார். அவர் பார்ப்பன வெறியர். அங்கு அவரது மனு உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இடைக்காலத் தடையும் வழங்குகிறது. மைய அரசாங்கம் ஆதாம் பாலம் பற்றிய ஒரு பிரமாணத்தைத் தாக்கல் செய்கிறது. அறிவியல் அடிப்படையில், தொல்லியல், வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பிரமாணம் அது.

ராமனும் ராமாயணமும் மனிதக் கற்பனைகளிலிருந்து எழுதப்பட்டவை என்று அந்தப் பிரமாணம் கூறியதில் என்ன தவறு? ராமனை வணங்க வேண்டாம் என்றோ, ராமாயணத்தைப் படிக்கக்கூடாதென்றோ அது சொல்லவில்லையே. ராமனும் ராமயணமும் மனிதக் கற்பனைகளேயன்றி யதார்த்தமானவை அல்ல என்றுதானே கூறுகிறது. மத நம்பிக்கைகளைப் புண்படுத்திவிட்டது என்று பாஜக சொல்கிறது; காங்கிரஸ் ஒப்புக் கொள்கிறது; அரசாங்கத்தின் பிரமாணம்,ராமனைப் பற்றியும் ராமாயணத்தைப் பற்றியும் குறிப்பிடாமல் ஆதாம் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதல்ல,அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையாகவே உருவான மணற்திட்டு என்று கூறுவதோடு நிறுத்தியிருக்கலாம் என்று ‘இந்து’ நாளேடு எழுதுகிறது. இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் சிலரும் இதே கருத்தையே எதிரொலித்தனர்

ஆதாம் பாலம் ராமனால் கட்டப்பட்டது என்பதற்கான ‘அசைக்கமுடியாத ஆதாரங்களாக’ உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டவை இராமாயணமும் ராமசரித்மானாசும்தான். புராணங்களையும் கட்டுக்கதைகளையும் ஆதாரமாகக் காட்டிக் கொண்டிருந்தால், அறிவியலுக்கு வேலையில்லை என்பதால்தான் தொல்லியல் துறையச் சேர்ந்த வல்லுநர்கள், அறிவியல் ஆதாரமில்லாத புராணங்களையும் தொன்மங்களையும் இந்த வழக்குக்கான சான்றுகளாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறினர். மேலும், “இந்தியத் தொல்லியல் துறை (Archealogical Survey of India) உலகம் முழுவதிலுமுள்ள இந்து சமுதாயம் ராமாயணம், ராமசரித்மானாஸ் ஆகியவற்றின் மீது வைத்துள்ள மரியாதையை உணர்ந்துள்ளது, அதை மதிக்கிறது” என்று தனது பிரமாணத்தில் கூறியது. அதே வேளை, “இந்தத் தொன்மங்களில் சொல்லப்படும் செய்திகளை மெய்ப்பிக்கின்ற வகையில் (ஆதாம் பாலத்தில்) மனித எச்சங்களோ, மனிதனால் கட்டப்பட்டவையோ ஏதும் கிடைக்கவில்லை” என்று கூறுகிறது.

அகமதாபாத்திலுள்ள விண்வெளி ஆய்வு நிலையம் (Space Application Centre) சேது பாலம் என்பது இயற்கையாகவே உருவான திட்டு என்று கூறுவதை எடுத்துக்காட்டிய தொல்லியல் துறை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (US National Aeronautics and Space Administration-NASA) எடுத்த விண்கலப் படங்கள் imagery), சேது பாலம் மனிதரால் கட்டப்பட்டவை என்னும் முடிவுக்கு வருவதற்கான போதுமான சான்றுகள் அல்ல என்றும் கூறியது. நாஸாவும்கூட, மிகத் தொலைதூரத்திலிருந்து எடுக்கப்பட்ட இத்தகைய படங்களைக் கொண்டு சேது பாலம் மனிதரால் கட்டப்பட்டதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியாது என்று விளக்கம் கூறியுள்ளது.

இந்தியப் புவியியல் ஆய்வுத் துறையும்கூட (Geological Survey of India), கடலில் மூழ்கியுள்ள பாறைகளைத் துளைபோட்டு ஆய்வு நடத்தியதில், மனிதனால் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறியது. இந்தியத் தீபகற்பத்தில் மனிதர்கள் வாழத் தொடங்குவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே களிமண், சுண்ணாம்புக் கல், மணல் ஆகியவற்றின் சேர்க்கையால் இயற்கையாகவே உருவான திட்டு என்றும் கூறியது. ராமர் பாலம் எனக் கூறப்படும் ஆதாம் பாலம் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானதாகும் என்பதை கடலியல் வல்லுநர்கள் ஐசோடோப் பரிசோதனை மூலம் நிறுவியிருக்கிறார்கள். இது டோம்போல் (tombol) எனச் சொல்லப்படும் மணல் திட்டு.

ஆனால், சங் பரிவாரத்தின் கணக்குப்படி ராமர் வாழ்ந்த காலம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன். ராமர் பாலத்தைக் கட்டியது மனிதர்கள்கூட அல்ல, அனுமானின் மேற்பார்வையில் வானர சேனை. அது மட்டுமல்ல, அந்தக் காலத்திலேயே தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சியடைந்திருந்தது. ஆகாய விமானங்கள் இருந்தன; ஏவு கணைகள் இருந்தன! நமக்கு வருத்தம் தருகிற விடயம் என்னவென்றால், அறிவியல் தொழில்நுட்பத்தில் அவ்வளவு பெரிய முன்னேற்றத்தை வானர யுகம் கண்டிருக்க, நமது கடவுள்கள் குரங்குச் சவாரி செய்வது போலவும் காளை மாட்டில் பயணம் செய்வது போலவும் அம்புகளை ஏவுவது போலும் காட்டப்படுவதுதான். சங் பரிவா¡ரத்தினர் இனிமேலாவது இந்தக் கடவுள்கள் சூப்பர் ஜெட் விமானத்திலோ, வ்¢ண்கலங்கள்¢லோ பயணம்செய்வதாகவும் அணுகுண்டு ஏவுகணைகளை வீசுபவர்களாகவும் ச்¢த்த்¢ர்¢த்து இந்து மதத்த்¢ன் பெருமையை நிலைநாட்ட வேண்டும்!

மன்மோகன் சிங் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக உள்ளவர் பரத்வாஜ் என்னும் படு பிற்போக்குப் பார்ப்பனர். அவர் கூறினார்: “ராம பிரான், இந்தியப் பண்பாடு, அற நெறி ஆகியவற்ரின் பிரிக்க முடியாத பகுதி. எனவே அவர் விவாதத்துக்கு அப்பாற்பட்டவர். அவர் இருக்கிறா இல்லையா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. இந்த உலகம் முழுவதும் இருப்பதற்கே இராமர்தான் காரணம்”. அது மட்டுமல்ல, “இமயம் எப்படி இமயமாக இருக்கிறதோ, கங்கை எப்படி கங்கையாக இருக்கிறதோ அதே போலத்தான் இராமர் என்பவரும் இராமர்தான். அது நம்பிக்கை சார்ந்த விஷயம். இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் வேண்டியதில்லை” என்று பொரிந்து தள்ளியிருக்கிறார்.

இதே பரத்வாஜ்தான் ராஜிவ் காந்தி அமைச்சரவையில் சட்ட இணை அமைச்சராக (Minsiter of State) இருந்தார். அயோத்தியில் ‘ஷிலான்யாஸ்’ (செங்கல் பூசை) நடத்த சங் பரிவாரத்துக்கு அனுமதி தருமாறு ராஜிவ் காந்திக்கு யோசனை சொன்னவர் இவர்தான். அதே போல, ஷா பானு வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும்படி ராஜிவுக்கு ஆலோசனை சொன்னவரும் இவர்தான். ஆக, இந்துத்துவத்தை வளர்க்கும் அதே வேளை, சிறுபான்மையினரிடையே பிற்போக்குவாதத்தை ஊக்குவிக்கும் மகத்தான சேவையை ஆற்றியிருக்கிறார்.

வருண-சாதி முறைக்கு நியாயம் கற்பிக்கும் ஒரு கருத்தியல் படைப்பு என்பதாலேயே பெரியார் ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றார். மக்களின் ஆன்மீக, மத நம்பிக்கை தொடர்பானவையே ராமனும் ராமாயணமும் என்றெல்லாம் வாதிட்டால், நாளை ஒரு கொலைக் குற்றவாளி, பகவத் கீதையை வைத்துக் கொண்டு தனது குற்றத்தை நியாயப்படுத்துவான். பகவத் கீதையைக் கடுமையாக விமர்சித்த அண்ணல் அம்பேத்கர் கேட்டார்: “மனிதனின் உடல்தான் அழிகின்றது, ஆன்மா அழிவதில்லை என்று பகவத் கீதை கூறுகிற கருத்தை ஒரு கொலையாளி நீதிமன்றத்தில் சொன்னால் நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளுமா?”.

இந்தியா மதச்சார்பற்ற நாடு எனச் சொல்லப்படுகிறது; எந்தவொரு மதத்திற்கும் தனிச் சலுகையோ முதலிடமோ இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அப்படியானால், ராமனையும் ராமாயணத்தையும் ஆன்மீக விடயங்களாக அங்கீகரிப்பதில்கூட பாரபட்சம் காட்டக்கூடாது. ஏனென்றால், இந்தியாவில் பல ராமாயணங்கள் உள்ளன. இவற்றில் வட இந்தியாவில் பிரசித்தி பெற்றவை, வால்மீகி ராமாயணமும் துளசிதாசரின் ராமசரித்மானஸ¤ம்தான். நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில், புது டில்லியில் சஹ்மத் பண்பாட்டு அமைப்பு ஒரு கண்காட்சியை நடத்தியது.

இந்தியாவில் உள்ள பல்வேறு ராமாயணங்களைப் பற்றிய ஒவியக் கண்காட்சி. பெளத்த ஜாதகக் கதைகளிலுள்ள ராமாயணத்தில் சீதை, ராமனின் தங்கை. ஆனால் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்கிறார்கள். பண்டைக் காலத்திலிருந்த சத்திரிய கோத்திரங்கள் தமது சாதித் தூய்மையைப் பாதுகாத்துக் கொள்ள சகோதர சகோதரிகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்ததை வரலாற்றாய்வாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். இது ஒருபுறமிருக்க, இந்த பெளத்த ராமாயணம், ராமனை புத்தரின் சீடனாகக் காட்டுகிறது. இது தவிர, சமண ராமாயணம் இருக்கிறது. இது ராமனை பார்ப்பன எதிர்ப்பாளனாகவும் வன்முறையை எதிர்ப்பவனாகவும் காட்டுகிறது. பெளத்த ராமாயணம், சமண ராமாயணம் ஆகிய இரண்டுமே இராவணனைக் கொடியவனாக, வில்லனாகக் காட்டுவதில்லை. மாறாக, ஆன்மீகப் பண்புடையவனாக, அறிவு வேட்கையுள்ளவனாக, தனது ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்கிற ஞானியாக, பொறுப்புணர்வுடைய அரசனாகக் காட்டுகின்றன.

இவை தவிர, ஆந்திராவில் உள்ள தெலுங்குப் பார்ப்பனப் பெண்களால் புனையப்பட்டுப் பாடப்படும் பாடல்களை அங்குள்ள எழுத்தாளர் ரங்கநாயகியம்மா தொகுத்துள்ளார். பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகளள மையக் கருவாகக் கொண்ட இந்தப் பாடல்கள், ஆணியப் பார்வைக்கு முற்றிலும் மாறுபட்ட பெண்ணியப் பார்வையை முன்வைக்கின்றன. பல்வேறு சோதனைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளான சீதை ராமனை வெற்றி கொள்வதாகவும் சூர்ப்பனகை ராமனைப் பழி தீர்த்துக் கொள்வதாகவும் கூறுகின்றன.

சங் பரிவாரம் சும்மா இருக்குமா? சஹ்மத் நடத்திய ஓவியக் கண்காட்சி அரங்கத்திற்குள் நுழைந்து அந்த ஓவியங்களைச் சின்னா பின்னமாக்கியது. கண்காட்சியை ஏற்பாடு செய்தவர்களைத் தாக்கியது. ராமனையும் சீதையையும், அண்ணன் - தங்கையாகவும் கணவன் -மனைவியாகவும் சித்திரித்தது இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டியது. உண்மையில் - நான் நினைக்கிறேன் - அவர்களுக்கு ஆத்திரமூட்டியது அண்ணனும் தங்கையுமாக இருந்த ராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டிருந்ததாக பெளத்த ராமாயணம் கூறுவது அல்ல; மாறாக, ராமனைப் பார்ப்பன எதிர்ப்பாளனாகவும் சீதையையும் சூர்ப்பனகையையும் பெண்ணடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களாகவும் இராவணனை ஞானவானாகவும் காட்டுவதுதான் அவர்களுக்கு எரிச்சல் உண்டாக்கியிருக்கும்.சஹ்மத் கண்காட்சியை சங் பரிவாரம் நிர்மூலமாக்கியதை நரசிம்ம ராவ் அரசாங்கம் கண்டிக்கவில்லை. மாறாக, அந்த அமைச்சரவையில் இருந்த சிவ்ராஜ் பாட்டீல் போன்றவர்கள், இந்துக்களின் மனம் புண்பட்டதால்தான் அந்த நிகழ்ச்சி நேரிட்டது என அறிக்கை விடுத்தனர்.

குஜராத்தில், டாங் (Dangs) என்னும் பழங்குடி மக்கள் இருக்கின்றனர். இந்த மக்கள் வாழும் வனப் பகுதியில் உள்ள குன்றொன்றுக்கு மரபாக வழங்கி வந்த பெயர் சாமக் டொங்கர். பயிர்களைக் காக்கும் தெய்வம் என்று டாங்குகள் அதை வணங்கி வந்தனர். ஆனால் சங் பரிவாரம் அதை இப்போது சபரி கும்பம் என்று பெயர் மாற்றிவிட்டது. ராமன் வனவாசத்தில்ருந்தபோது அவனுக்குப் பழங்கள் கொண்டு வந்து கொடுத்தவள் சபரி என்று ராமாயணம் கூறுகிறதல்லவா? அந்தக் குன்றில்தான் அவள் ராமனுக்குப் பழங்கள் தந்தாள் என்று சங் பரிவாரத்தின் வரலாற்றறிஞர்களும் தொல்லியல் வல்லுநர்களும் கூறிவிட்டனர்.

வேறு என்ன ஆதாரம் வேண்டும் அந்தக் குன்றின் பெயரை மாற்றி அதற்கு சபரியின் பெயரைச் சூட்டுவதற்கு?அங்கு சபரிக்கு கோவிலும் கட்டிவிட்டனர். அத்தோடு விட்டார்களா? அங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் ஓடும் பூர்ணா ஆற்றில்தான் மாதங்க முனிவர் குளிப்பது வழக்கம் என்றும் பக்கத்து மலையிலுள்ள ஒரு பாறையில் காணப்படும் கோடுகள், லட்சுமணன் அம்புகளைத் தீட்டியதால் ஏற்பட்டவை என்றும் இந்த அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்கள் கூறும் இந்த வரலாற்று உண்மைகளைத் தட்டிக் கேட்டால், மத உணர்வைப் புண்படுத்துவதாகக் கலகம் செய்வார்கள். “ஆமாம், மத உணர்வுகளை புண்படுத்துவது தவறுதான், நாமும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அனாவசியமாக வார்த்தைகளை அள்ளி வீசக்கூடாது” என்று இடதுசாரிகளும் கூடக் கூறிக் கொண்டிருந்தால், இந்த அறிவியல் விரோத, மக்கள் விரோத, பார்ப்பனியக் கருத்துகளை எப்படி எதிர்கொள்வதற்கு? எப்போது தடுத்து நிறுத்துவது?

கையால் மலம் அள்ளுவதற்காகவே இந்த நாட்டில் நாமெல்லோரும்-பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதோர் எல்லோரும் சேர்ந்து ஒரு சாதியை வைத்திருக்கிறோம். இது யாருடைய மத, மன உணர்வுகளையும் புண்படுத்துவதே இல்லை. அவர்களது குரல் மலச் சட்டிகளைத் தாண்டி உச்ச நீதிமன்றத்துக்கு எப்படிச் செல்லும்? மலம் நிறைந்த மனமுடைய நமது சாதியமைப்பில் எல்லோர்க்கும் கடையர்களாய் எல்லோருடைய மலங்களையும் அள்ளுகிறவர்களாய் தனியொரு சாதியினர் இருக்கும்வரை, அவர்களுக்கும் கீழே மலமும் மூத்திரமும் பிற அழுக்குகளும் படிந்த அவர்களது துணிகளை வெளுக்கும் புதிரை வண்ணார்கள் இருக்கும் நிலை இந்துக்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ளும் சங் பரிவாரத்தினரது மனங்களைப் புண்படுத்தாது. ஆனால் இந்த நிலை நீடிக்கும் வரை நமக்கும்கூட சுயமரியாதையோ சமதர்மமோ கிடைக்காது.

ஆனால் சங் பரிவாரத்தினர் இதைப் பெருமைக்குரிய விஷயமாகக் கருதினால் நாம் வியப்படைய வேண்டியதில்லை. தொழிலுற்பத்தி,வாணிபம், சேவைகள் (services) என எல்லாத் துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ள Outsourcing என்பதைக் கண்டுபிடித்ததே இந்து மதம்தான் என்றும் இங்கிருந்துதான் இந்த ஏற்பாட்டை வெள்ளைக்காரன் கற்றுக் கொண்டான் என்றும் அவர்கள் கூறுவார்கள். சாதிப் படிநிலையில் ஒவ்வொரு சாதியும் தனக்கு வேண்டிய, ஆனால் தன்னால் இழிவாகவோ அல்லது கடினமானதாகவோ கருதப்படுகிற உழைப்பையும் உழைப்பின் விளைபொருள்களையும் தனக்குக் கீழே உள்ள சாதியிடமிருந்து Outsourcing மூலமாகத்தானே பெற்றுக் கொள்கிறது?


Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
arul
2007-08-17 02:44:00
meetingwitharul@gmail.com

Very good interview

Jayakannan
2007-08-17 02:54:00
meet_jaya@sify.com

மிக அருமையான நேர்காணல். தெளிந்த கருத்துக்கள். இதுபோன்று நிறைய நேர்காணல்கள் வெளிவர வேண்டும்.

Dennis
2007-08-17 03:07:00
tamil17@yahoo.com

Vanakam... miga arumaiyana, thelivana nerkaanal. Varthagalil thee pori therikirathu.... Thozhar Seeman thodarattum ungal pani... nandri

kumar
2007-08-17 03:19:00
kumarki@rediffmail.com

After a long time, i have read a detailed interview. It was interesting also. Seemaan spoke so many things very bravely. thanks to keetru.com

sudhamathi
2007-08-17 03:24:00
sudhamathi@mail.com

"இது என்ன ஆனந்த விகடன் ஆசையா? இல்லை அக்ரகாரத்து ஆசையா? இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களை ஏமாற்றிப் பிழைத்தது போதாதா?" நிச்சயமாக அக்ரகாரத்து ஆசைதான்

kumanan
2007-08-17 05:08:00
osldn@yahoo.com

Seema oru periya Seemaanaaga maarinaal Naattukkum namakkum nanmai enbahai ovvoru thamizhanum unaranum. Vaazhga seeman

G.Manikandan
2007-08-18 06:39:00
spiderboyz_007@yahoo.com

ithu oru arumaiyana nerkanal . ithe pola ulla nerkanalkalai iniyum ethirparkintrom .nantri

saravanan
2007-08-18 07:11:00
saran_cinema@yahoo.com

manathai idarippogirathu ungal kavaithi.

arul
2007-08-18 01:18:00